இலங்கை ரக்பிக்கு உதவிக்கரம் நீட்டிய ஶ்ரீலங்கா கிரிக்கெட்

இலங்கை ரக்பி அணி வீரர்களுக்கு, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் 30,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

முதலாம் பிரிவு ஆசிய ரக்பி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை ரக்பி அணி வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, சுற்றுலா மற்றும் காணி அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வு  விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் நேற்று(13.05) நடைபெற்றது. 

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, 

“ரக்பி விளையாட்டை விளையாடிய ஒரு வீரர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்பதை எனது அனுபவத்தில் கூறுகிறேன். அன்றைய போட்டியில் அதிக பார்வையாளர்களை கண்டேன். போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது, ​​என் அருகில் இருந்த நியூசிலாந்து தூதுவர் இலங்கை ரக்பி பற்றி வெகுவாகப் பேசினார். உங்கள் அனைவரையும் நினைத்து பெருமையடைந்தேன். நாம் உடலில் சிறியவர்கள் ஆனால் உள்ளத்தில் பெரியவர்கள். அதை இலங்கையர்களாகிய நாம் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளோம். 

நீங்கள் அனைவரும் ஒரு அணியாக மிகவும் திறமையாக விளையாடுவதை அன்று நான் என் கண்களால் பார்த்தேன். இலங்கையின் மூன்று சிறந்த பயிற்சியாளர்கள் இந்த வீரர்களுக்கு ஒன்றாக பயிற்சி அளித்தனர். இந்த வெற்றியின் பின்னால் எமக்கு பலம் தந்த அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அன்புடன் நினைவுகூர வேண்டும். நீங்கள் காயம்பட்டால் அவர்கள்தான் உங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களே உங்களை ஊக்குவிக்கின்றனர். 

இலங்கை ரக்பி புதிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 45 வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்கி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான வேலைத்திட்டத்தில் செல்வதற்கு உங்களை ஊக்குவிப்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் 30,000 அமெரிக்க டொலர்களை நிதி மானியமாக வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 05 போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அன்றைய போட்டியில் வீரர்களின் விளையாட்டு முறைக்கு ஏற்ப மேலும் வெற்றிகளை நோக்கி செல்ல முடியும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இதன்போது இலங்கை கிரிக்கெட் வழங்கும் நிதி வசதிகள் அவர்களுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. அடுத்த 2-3 மாதங்களில் வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்புடன் Dialog Super 07 போட்டியை நடத்தவுள்ளோம். 

விளையாட்டுக் கழக மட்டத்தில் இந்தப் போட்டியை நடத்த எண்ணினேன். போட்டியைக் காண ஏராளமான பார்வையாளர்களை வருவார்கள் என்று நம்புகிறேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் நடமாடும் மின் விளக்கு அமைப்பை தயார் செய்து இரவில் விளையாடும் மைதானங்களுக்கு வழங்கவுள்ளோம். 

இலங்கையில் ரக்பி எந்த இடத்தில் உள்ளது என்பதை ஒரு அணியாக நீங்கள் காட்டியிருப்பதால், எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் முதல் 3 அணிகளில் முன்னோக்கி கொண்டு வருவோம்” என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply