விளம்பர பலகை இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு..!   

இந்தியாவின் மும்பை நகரில் நேற்று(14.05) மாலை வீசிய புயலின் காரணமாக விளம்பர பலகையொன்று இடிந்து வீழ்ந்ததில்14 பேர் உயிரழந்துள்ளதுடன், 70 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்திற்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த 70 மீட்டர் நீளமும் 50 மீட்டர் அகலமும் கொண்ட விளம்பர பலகை, திடீரென ஏற்பட்ட புயலின் காரணமாக நேரடியாக எரிபொருள் நிலையத்தின் மீது வீழ்ந்துள்ளது. 

மும்பை தீயணைப்பு படையினருடன் ஏனைய குழுக்களும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தினால் குத்தகைக்கு விடப்பட்டுள்ள குறித்த இடத்தில், தனியார் நிறுவனமொன்று 4 விளம்பர பலகைகளை நிறுவியுள்ள நிலையில், அதில் ஒரு விளம்பர பலகையே இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, விளம்பர பலகையை நிறுவிய தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மீது மும்பை பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

குறித்த இடத்தில் நான்கு விளம்பர பலகைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், வினம்பர பலகையை நிறுவுவதற்கு முன்னர் உரிய சான்றிதழ்கள் பெறப்படவில்லை. இந்நிலையில் ஏனைய 3 விளம்பர பலகைகளையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள் தொடர்பிலும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளார். 

இதன்போது, அபாயகரமான மற்றும் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளும் உடனடியாக அகற்றப்படும் என மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். 

விளம்பர பலகை இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் இந்திய ரூபா வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply