பாலியல் குற்றங்களிலிருந்து நேபாள கிரிக்கெட் வீரர் விடுதலை 

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சுழற்பந்து வீச்சாளருமான சந்தீப் லமிச்சேன் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

23 வயதான சந்தீப் லமிச்சேனிற்கு, கடந்த ஜனவரி மாதம் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தினால் 18 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 8 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், நேபாள உயர் நீதிமன்றத்தினால் நேற்றைய தினம்(15.05) நிரபராதி என நிரூபிக்கப்பட்ட சந்தீப் லமிச்சேன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கு தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில்,  சந்தீப் லமிச்சேன் குற்றமற்றவர் எனவும், அவரை நேபாள உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதாகவும், விளையாட்டு வீரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஒருவர் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.  

இந்த தீர்ப்பின் ஊடாக, டி20 உலகக் கிண்ணத்திற்கான அறிவிக்கப்பட்ட நேபாள அணியில் தேர்வு செய்யப்படாத சந்தீப் லாமிச்சேன் மீண்டும் நேபாள அணியில் இணைத்துக் கொள்ளப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இம் மாதம் 25ம் திகதி வரையில் டி20 உலகக் கிண்ணத்திற்கான அணிகளில் மாற்றம் செய்ய முடியும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.  

சந்தீப் லமிச்சேனிற்கு கடந்த ஜனவரி மாதம் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தினால் பாலியல் பலாத்கார குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது. 

இருப்பினும், கிரிக்கெட் வீரரை நேபாள உயர் நீதிமன்றம் 2 மில்லியன் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்திருந்ததுடன், இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில்,  நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சந்தீப் லமிச்சேன் குற்றமற்றவர் என நேபாள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Social Share

Leave a Reply