‘பொருளாதார மந்தநிலை கடுமையாக பாதித்துள்ளது’ – பிரதமர்

புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (23/11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்துரையாற்றிய பிரதமர், ”கொவிட் தொற்றின் ஆரம்பத்தில் எமது அரசாங்கம் ஜனாதிபதி செயலணியின் ஊடாக மக்களின் அத்தியவசிய சேவைகளை நிறைவேற்றுவதற்கும், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு நாளின் 24 மணிநேரமும் பிரதமர் அலுவலகம் செயற்பட்டது என்பதை நாம் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.

அத்துடன் மக்களுக்கு அத்தியவசிய சேவைகள் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்நின்றோம். வைத்தியர்கள். பாதுகாப்பு படையினர் ஆகியோர் அதற்காக தமது கடமைகளை நிறைவேற்றினர்.

கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது என்பதை நாம் அறிவோம். கொவிட் தொற்றிலிருந்து வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் இப்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை உள்ளடக்கிய வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் இம்முறை சமர்பித்தார். இந்த கடினமான சூழ்நிலையில் மக்கள் மீண்டெழக் கூடியதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

ஏறக்குறைய 25 வருடங்களாக தீர்க்கப்படாத ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை இந்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்துக்காக இதையெல்லாம் செய்கிறோம். சவால்களுக்கு மத்தியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எமது முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவளிப்பீர்கள் என நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

'பொருளாதார மந்தநிலை  கடுமையாக பாதித்துள்ளது' -  பிரதமர்

Social Share

Leave a Reply