டி20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவின்றி நிறைவடைந்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டியை கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மேற்கிந்திய தீவுகளில் பார்படோஸ் மைதானத்தில் நேற்று(04.06) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. போட்டியின் ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி தாமதமாகவே ஆரம்பித்தது.
பின்னர் ஸ்கொட்லாந்து அணி 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களை பெற்றிருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி சில நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துடன், போட்டி 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி, ஸ்கொட்லாந்து அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஸ்கொட்லாந்து அணி சார்பில் ஜார்ஜ் முன்சி 41 ஓட்டங்களையும்
மைக்கேல் ஜோன்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். DLS முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 10 ஓவர்களில் 109 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸின் ஆரம்பத்தின் போது மீண்டும் மழை குறுக்கிட்டமையினால் போட்டியை கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர். அதன்படி, இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.