தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் நேற்று (23/11) கனடாவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளனர்.
கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின் பேரில் கனடா பாராளுமன்றில் இந்த சந்திப்பை மேற்கொண்டதாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி, 15 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்ததாகவும், இதன்போது எம் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் வட கிழக்கில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள் அதனுடன் கூடிய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாக கூறினார்.
அத்துடன் எமது மக்களுக்கு பயன் தரக்கூடிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் சில பல திட்ட முன்மொழிவுகளை முன்வைத்ததாகவும், கனடிய அரசாங்கமானது எமது மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கு உரிய அழுத்தத்தை இலங்கை அரசு மேல் பிரயோகிக்க வேண்டும் எனவும் எமது ஆணித்தரமான கோரிக்கைகளை முன்வைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
