மேற்கிந்திய தீவுகள் மற்றும் உகாண்டா அணிகளுக்கிடையில் இன்று (09.06) T20 உலககிண்ணத்தின் 18 ஆவது போட்டி மேற்கிந்திய தீவுகளிலுள்ள ப்ரொவிடென்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 134 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தங்களுது T20 போட்டிகளில் பெரிய வெற்றியினை பெற்றதுடன் T20 உலகக்கிண்ணத்தின் 2 ஆவது பெரிய வெற்றியினையும் பதிவு செய்துள்ளனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோன்சன் சார்ள்ஸ் 44(42) ஓட்டங்களையும், அன்ட்ரே ரஸ்ஸல் அட்டமிழக்காமல் 30(17) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரையன் மசாபா 2 விக்கெட்களையும், தினேஷ் நக்ரானி, அல்பேஷ் ரம்ஜானி, கொஸ்மாஸ் கியுவுட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய உகாண்டா அணி 12 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் யாரும் சரியாக பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் அகீல் ஹொசைன் 5 விக்கெட்களையும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களையும், ரொமாரியோ ஷெப்பர்ட், அன்ட்ரே ரஸ்ஸல், குடகேஷ் மொட்டி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள். அகீல் ஹொசைன் அவரது T20 போட்டிகளில் முதலாவது 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த போட்டியின் நாயகனாக அகீல் ஹொசைன் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (09.06) இரவு 8.00 மணிக்கு T20 உலக்கிண்ணத்தின் 19 ஆவது போட்டி அமெரிக்காவிலுள்ள நியூயோர்கில் நடைபெறவுள்ளது.
ஓமான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் இன்று இரவு 10.30 இற்கு T20 உலக்கிண்ணத்தின் 20 ஆவது போட்டி மேற்கிந்திய தீவுகளிலுள்ள நோர்த் சௌண்டில் நடைபெறவுள்ளது.