அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொறுப்பற்ற விதத்தில் நாட்டின் சட்டத்தை மீறியுள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் நுவரெலியா பீட்ரு பெருந்தோட்டத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளிப்படுத்திய சட்டவிரோத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையைக் கடுமையாக கண்டிப்பதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் அறிக்கையொன்றினுடாக தெரிவித்துள்ளது.
ஜீவன் தொண்டமான் சட்டத்தை புறக்கணிப்பதும், அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக செயற்படுவதும் பெருந்தோட்ட சமூகத்தினரிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் இத்தகைய செயற்பாடுகள் பெருந்தோட்ட தொழில் பங்குதாரர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொலிஸார் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.