அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி, வெளியேறியது பாகிஸ்தான் 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்க அணி தகுதி பெற்றுக்கொண்டது. அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டதால், அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. 

அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அமெரிக்கா, புளோரிடாவில் இன்று(14.06) நடைபெறவிருந்தது. இருப்பினும் போட்டியின் நாணய சுழற்சிக்கு முன்பிலிருந்து பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டியை கைவிடுவதற்கு நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டதுடன், இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

இதன் காரணமாக குழாம் ‘A’யில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா பங்குபற்றிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று தரவரிசையில் 5 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு முன்னேறி சூப்பர் 8 சுற்றுக்கு  தகுதி பெற்றுக்கொண்டது. டி20 உலகக் கிண்ணத் தொடரில் இணை அங்கத்துவ நாடொன்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்ட 7வது சந்தர்ப்பமாகும்.   

குழாம் ‘A’யில் உள்ள இந்தியா அணியும் முன்னதாகவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், இதே குழாமில் உள்ள பாகிஸ்தான் அணி டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியது. மூன்று போட்டிகளில் பங்குபற்றிய பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தமையே பாகிஸ்தானின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் தற்போதைய நிலவரப்படி, பலமிக்க அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.  

Social Share

Leave a Reply