முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளார் – அநூப பஸ்குவெல்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17.06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் கூறியுள்ளார்.

கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டை முன்னேற்ற முடியும். அவ்வாறின்றி தனிநபர்கள் அல்லது கட்சிகளினால் அதனைச் செய்ய முடியாதென கூறஜய அமைச்சர்
சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50% நிவாரணம் வழங்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாட்டு மக்களின் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. அதற்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்க பலர் முன்வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடத்தில் அதற்கான கொள்கைகள் எவையும் இல்லை. நாட்டில் பலரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை ஏற்றுக்கொண்டுள்ளபோது, சிலர் மாத்திரம் அதற்குப் புறம்பாகச் செயற்படுகிறார்கள்.

யார் எவ்வாறு அறிக்கைகளை வெளியிட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் வெற்றியடைந்துள்ளன என்பதே உண்மையாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளதுடன் அதனை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்நாட்டில் பொருளாதார முறைமை, பணவீக்கம், சமூக நலன் ஆகிய பிரிவுகளை நோக்கி நகர்கிறது. அரசாங்கம் நலன்புரித் திட்டங்களை ஆரம்பித்தபோது 35% ஆக வட்டி விகிதம் இன்று 12% ஆகக் குறைந்துள்ளது.

மேலும் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். தனிநபர்கள் அல்லது கட்சிகளால் அதனைச் செய்ய முடியாது. கட்சிகள் மற்றும் நபர்கள் மாறுவதால் ஒரு நாட்டின் பொருளாதாரம் மாற்றம் காணாது.

தேர்தல் நேரத்தில் எல்லையின்றி ஊழல் சொத்துக்கள் வந்துச் சேர்வதைத் தவிர்ப்பதற்காகவே தேர்தல் செலவுச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் ஊழலுக்கு முக்கிய காரணம் தேர்தல் முறை என்று கூறிவிட முடியாது. தற்போது நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு முறைமையினால், தேர்தலில் வெற்றிபெற ஒரு வேட்பாளருக்கு குறைந்தது 500 இலட்சம் ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியம்.

அரசின் கொள்கைகள் பிரசித்தமடைந்துள்ளன. அந்த வேலைத்திட்டங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தலைமை தாங்குகிறார் என்பது இரகசியமல்ல. அதனை ஒவ்வொரு துறைசார் நிபுணர்களும், மக்களும், பிற கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 50% நிவாரணத்தை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார். அதற்கு 1.2 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது.

இதனூடாக 1200 ஹெக்டெயரில் புதிதாக தேயிலை நடப்படும். அதற்குத் தேவையான உர மானியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேலும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. பெண்கள் வலுவூட்டலுக்கான ஆணைக்குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதுவும் வரலாற்றில் முதல்முறையாக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.” என்றார்.

Social Share

Leave a Reply