இலங்கைக்கு மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரை இலங்கை அணி மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான தொடரின் இன்று(18.06) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இலங்கை மகளிர் அணி அபார வெற்றியீட்டியதன் ஊடாக இவ்வாறு தொடரைக் கைப்பற்றிக் கொண்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் இரண்டாவது போட்டி காலியில் இன்று(18.06) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 31 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், ரஷாதா வில்லியம்ஸ் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில், கவிஷா தில்ஹாரி 4 விக்கெட்டுக்களையும், அச்சினி குலசூர்ய மற்றும் சமரி அத்தபத்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
93 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 21.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இலங்கை அணி சார்பில், விஷ்மி குணரத்ன 50 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில், கரிஷ்மா ராம்ஹரக் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்படி, இந்த போட்டியில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான தொடரை 2-0 என்ற ரீதியில் கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகியாக இலங்கை அணியின் கவிஷா தில்ஹாரி தெரிவு செய்யப்பட்டார்.