சூப்பர் 8: தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியீட்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகள், அன்டிகாவில் நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  அமெரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் டி கொக் 74 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 46 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசென் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அமெரிக்க அணி சார்பில் பந்து வீச்சில் நேத்ராவல்கர், ஹர்மீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர். 

195 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. அமெரிக்க அணி சார்பில் ஆண்ட்ரிஸ் கௌஸ் 80 ஓட்டங்களையும், ஹர்மீத் சிங் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பந்துவீச்சில் ரபாடா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். 

இதன்படி, இந்த போட்டியில்  தென்னாப்பிரிக்கா அணி 18 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாப்பிரிக்கா அணியின் டி கொக் தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply