சூப்பர் 8: இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், சென்ட் லூசியாவில் இன்று(21.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் டி கொக் 65 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

164 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஹரி புரூக் 53 ஓட்டங்களையும், லியம் லிவிங்ஸ்டன் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பந்துவீச்சில் ரபாடா, கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில்  தென்னாப்பிரிக்கா அணி 7 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாப்பிரிக்கா அணியின் டி கொக் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply