LPL – கண்டி அணிக்கு கடினமான இலக்கு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளான இன்று(02.07) இரண்டாவது போட்டியில் கண்டி பல்கோன்ஸ், கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய கொழும்பு அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப விக்கெட்கள் இரண்டையும் இழந்து தடுமாறிய கொழும்பு அணியை முஹமட் வசீம், சதீர சமரவிக்ரம ஜோடி மீட்டு எடுத்தது. இருவரும் 78(37)ஓட்டங்களை பகிர்ந்தனர். ஒன்பதாவது ஓவரில் வனிந்து ஹசரங்க வஸீமினின் விக்கெட்டை கைப்பற்றி இணைப்பாட்டத்தை முறியடித்தார். வசீம் 32(18) ஓட்டங்களுடன் வெளியேறினார். இரண்டு பந்துகளை எதிர்கொண்ட க்ளன் பிலிப்ஸ் வனிந்துவின் பந்துவீச்சில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். இதன் மூலம் அதிரடியாக சென்ற கொழும்பின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. சதீர சமரவிக்ரம 48(26) ஓட்டங்களை பெற்ற வேளையில் அஹா சல்மானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆறாவது விக்கெட்டுக்காக இணைந்த திசர பெரேரா, ஷதாப் கான் இணைந்து 38 ஓட்டங்களை பெற்று மீண்டும் கொழும்பு அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். ஷதாப் கான் 20(17) ஓட்டங்களை பெற்ற நிலையில் கஸூன் ரஜித்தவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திசரவுடன் ஜோடி சேர்ந்த சாமிக்க கருணாரட்ன அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையை மேலும் உயர்த்தினார். இறுதி ஓவரில் தஸூன் சாணக்கவின் பந்துவீச்சில் திசர பெரேரா 38(30) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சாமிக்க கருணாரட்ன 25(10) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 17(10) ஓட்டங்களையும், ஷெவோன் டானியல் 03(05) ஓட்டங்களையும் பெற்றனர்.

கண்டி அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 ஓவர்களில் ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை வீழ்த்தினார். அஹா சல்மான் 2 ஓவர்களில் 10 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். கஸூன் ரஜித்த 3 ஓவர்கள் பந்துவீசி 56 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். துஸ்மாந்த சமீர 4 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். கமிந்து மென்டிஸ் 4 ஓவர்களில் 31 ஓட்டங்களை வழங்கினார். நேற்றைய போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றிய தஸூன் சாணக்க மூன்று ஓவர்கள் பந்து வீசி 25 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். அவரின் ஒரு ஓவரை பாவிக்காமல் விட்டது கண்டி அணிக்கு பின்னடைவை வழங்கலாம்.

கண்டி அணி நேற்று நடைபெற்ற தம்புள்ள சிக்சேர்ஸ் அணியுடனான போட்டியில் கண்டி அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் களமிறங்கவுள்ளது. கொழும்பு அணி தமது முதற் போட்டியில் இன்று களமிறங்கியுள்ளது.

அணி விபரம்

கண்டி மூன்று மாற்றங்களை செய்துள்ளது. சத்துரங்க டி சில்வா, மொஹமட் ஹஸ்னைன், சமத் கோமஸ் ஆகியோரை நீக்கி அஹா சல்மான், கஸூன் ரஜித்த, பவான் ரத்நாயக்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொஹமட் ஹரிஸ், அஹா சல்மான், கஸூன் ரஜித்த, பவான் ரத்நாயக்க

கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், ஷெவோன் டானியல், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, முஹமட் வசீம்

Social Share

Leave a Reply