‘கிளப் வசந்தா’ என அழைக்கப்படும் இலங்கை வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட மற்றுமொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு, அதுருகிரியவில் இன்று(08.07) காலை இந்த தாக்குதல் நடைபெற்றது. T56ரக துப்பாக்கிகளுடன் வருகைத்தந்த சிலர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் கார் ஒன்றில் வருகை தந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தள்ளதுடன், குறித்த கார் கடுவெல, கொரதொட்டை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் காரை வீதியோரத்தில் நிறுத்தி, அங்கிருந்து வேனொன்றில் தப்பிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இந்த தாக்குதல் வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டிருக்கலாம் என பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சம்பவத்தின் போது காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.