டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முதல் நாள், இலங்கை அணி தங்கியிருந்த ஹோட்டலிலுள்ள அறையொன்றில் அணியின் சில வீரர்களும், இலங்கை அணியுடன் தொடர்புடைய சில அதிகாரிகளும் இணைந்து மது அருந்தியதாக ஆங்கில வார இறுதி பத்திரிகையொன்றில் கடந்த 7ம் திகதி வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கமளித்துள்ளது.
குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களை ஶ்ரீலங்கா கிரிக்கெட் மறுத்துள்ளதுடன், அத்தகைய செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஆதாரமற்ற குறித்த செய்தி முற்றிலும் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய செய்திகள் ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் வீரர்களின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு ஏற்ப்பட்ட சேதங்களை சரி செய்வதற்கு, குறித்த பத்திரிகையில் திருத்தம் செய்ப்பட்ட செய்தியை வெளியிடுமாறும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் கோரிக்கை விடுத்துள்ளது.