இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், 700 டெஸ்ட் விக்கெட்டுக்களை கடந்த ஜாம்பவான்களில் ஒருவருமான ஜேம்ஸ்(ஜிம்மி) அண்டர்சன் டெஸ்ட் அரங்கிலிருந்து இன்று(12.07) ஓய்வு பெற்றார்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், 41 வயதான ஜேம்ஸ் அண்டர்சன் இந்த போட்டியுடன் டெஸ்ட் அரங்கிற்கு விடை கொடுத்தார்.
தன்னுடைய இறுதி போட்டியிலும் சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் அண்டர்சன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 2003ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி, இதுவரையில் 188 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 704 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுக்களை கடந்த மூன்றாவது வீராக ஜேம்ஸ் அண்டர்சன் உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இலங்கையின் முத்தயைா முரளிதரன்(800 விக்கெட்டுக்கள்), அவுஸ்ரேலியாவின் ஷேன் வார்ன்(708 விக்கெட்டுக்கள்) ஆகிய இருவருமே ஜேம்ஸ் அண்டர்சனுக்கு முன்னர் 700 டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய இரு வீரர்களாவர்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியின் மூன்றாம் நாளான இன்று(12.07) இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வந்த இங்கிலாந்து அணி 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10ம் திகதி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 41.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் மிகைல் லூயிஸ் 27(58) ஓட்டங்களையும், கவேம் ஹாட்ஜ் 24(48) ஓட்டங்களையும், அலிக் ஏதனேஸ் 23(56) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அண்டர்சன், கிரிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். தன்னுடைய இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஜேம்ஸ் அண்டர்சன் பெற்றுக்கொண்ட 701 டெஸ்ட் விக்கெட் இதுவாகும்.
பின்னர், முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் சாக் கிராலி 76(89) ஓட்டங்களையும், ஜேமி ஸ்மித் 70(119) ஓட்டங்களையும், ஜோ ரூட் 68(114) ஓட்டங்களையும், ஒலி போப் 57(74) ஓட்டங்களையும், ஹாரி புரூக் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுக்களையும், ஜேசன் ஹோல்டர், மொடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
250 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது 47 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் மொடி ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அண்டர்சன் 3 விக்கெட்டுக்களையும், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக, இங்கிலாந்து அணி சார்பில் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற கஸ் அட்கின்சன் தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.