பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆராய்ந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்கு ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை(24.07) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று(24.07) உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த இடைக்கால உத்தரவின் போது சட்டத்திற்கு அமைய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 9 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று(24.07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில், வழங்கப்பட்ட தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆராய்ந்து எதிர்வரும் 2 நாட்களுக்குள் அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.