இந்தியா அணிக்கு அபார வெற்றி

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது 20-20 போட்டியில் இந்தியா அணி 44 ஓட்டங்களினால் சிறப்பான வெற்றி ஒன்றை பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

214 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி நிதானமான ஆரம்பத்தை ஆரம்ப ஓவர்களில் மேற்கொண்டு பின்னர் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிபப்டுத்தினார். குஷல் மென்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க ஜோடி அபாரமாக துடுப்பாடினார். இலங்கை இப்படித்தான் துடுப்பாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தியானது. ஆனாலும் அது தொடரவில்லை. 45(27) ஓட்டங்களை பெற்ற வேளையில் குஷல் மென்டிஸ் ஆர்ஷிப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 8.4 ஓவர்களில் 84 ஓட்டங்கள் என்ற நிலை காணப்பட்டது. ஆடுகளம் நுழைந்த குஷல் பெரேரா பத்தும் நிஸங்கவுக்கு ஆதரவு வழங்கு நிஸ்ஸங்க அதிரடி நிகழ்த்தினார். 78 ஓட்டங்களை பெற்ற வேளையில் பிஷ்ணோய் அவரின் பிடியை தவறவிட்டார். அடுத்த பந்தில் அதாவது அடுத்த ஓவரின் முதற் பந்தில் அவர் அக்ஷர் பட்டேலின் பந்துவீச்சில் 79(48) ஆட்டமிழந்தார். அதே ஓவரில் குஷல் பெரேரா 20(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அந்த ஆட்டமிழப்போடு இலங்கையின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

அதன் பின்னர் வந்ததும் போனதுமாக துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழக்க இந்தியா அணியின் வெற்றி உறுதியானது. சரித் அசலங்க 2 பந்துகளில் ஓட்டமின்றி ரவி பிஷ்னோயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தஸூன் சாணக்க பந்துகளை எதிர்கொள்ளாமல் ரன் அவுட் ஆனார். வனிந்து ஹசரங்க 2(03) ஓட்டங்களோடு ஆர்ஷிப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கமிந்து மென்டிஸ் 12(08) ஓட்டங்களை பெற்ற வேளையில் ரயான் பராக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி 19.2 ஓவர்களில் விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களை பெற்றது.

இந்தியா அணியின் பந்து வீச்சில் ஆர்ஷிப் சிங் 3 ஓவர்களில் 24 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். மொஹமட் சிராஜ் 3 ஓவர்களில் 23 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். அக்ஷர் பட்டேல் 4 ஓவர்களில் 38 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். ரவி பிஷ்ணோய் 4 ஓவர்களில் 37 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். ரயான் பராக் 1.2 ஓவர்களில் 5 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்தியா அணி சார்பாக துடுப்பாட ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில், ஜஷாஸ்வி ஜய்ஸ்வால் ஆக்ரோஷமாக அடித்தாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். பவர் பிளே ஓவர்கள் நிறைவடையும் இறுதிப் பந்தில் டில்ஷான் மதுசங்கவின் பந்துவீச்சில் கில் 34(16) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்தியா அணி 6 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 74 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அடுத்த ஓவரில் வனிந்து ஹசரங்கவின் முதற் பந்தில் ஜய்ஸ்வால் 40(21) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பான்ட் ஜோடி இணைப்பாட்டத்தை உருவாக்கியது. 8.5 ஓவர்களில் இந்தியா அணி 100 ஓட்டங்களை கடந்தது. அதிரடியாக துடுப்பாடிய சூர்யா 58(26) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 76 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்து. மதீஷ பத்திரன அவரின் விக்கெட்டை கைப்பற்றினார். மதீஷவின் பந்துவீச்சில் ஹர்டிக் பாண்ட்யா 09(10) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ரயான் பராக் 07(06) ஓட்டங்களோடு மதீஷவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஷாப் பான்ட் துடுப்பாட்டத்தில் ஆரம்பத்தில் தடுமாறினார். பின்னர் மீண்டு அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். இதியில் மதிஷவின் பந்துவீச்சில் 49(33) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 01(02) ஓட்டங்களை பெற்ற வேளையில் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அக்ஷர் பட்டேல் 10 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இந்தியா அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 ஓவர்களில் 28 ஓட்டங்களை 01 விக்கெட்டை கைப்பற்றினார். டில்ஷான் மதுசங்க 3 ஓவர்களில் 45 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். மதீஷ பத்திரன 4 ஓவர்களில் 40 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை கைப்பற்றினார். இது இரண்டாவது நான்கு விக்கெட் பெறுதியாகும். மஹீஸ் தீக்ஷண 4 ஓவர்களில் 44 ஓட்டங்களை வழங்கினார். அசித்த பெர்னாண்டோ 4 ஓவர்களில் 47 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். LPL தொடரில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை கைப்ற்றிய தஸூன் சாணக்க இந்த போட்டியில் பந்துவீசவில்லை.

இன்று இலங்கை அணியின் களத்தடுப்பு சரியாக அமையவில்லை. பிடிகள் தவறவிடப்பட்டமை, நான்கு ஓட்டங்களை தவறவிட்டமை என்பன இலங்கை அணிக்கு பாதிப்பாக அமைந்தது.

இரு அணிகளுக்குமான இரண்டாவது 20-20 நாளை இரவு 7 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply