இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதற் தடவை ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளது. ஐந்தாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத தெரிவாகிய நிலையில் முதற் தடவை கிண்ணத்தை வென்றுள்ளது. ஒன்பது தடவைகளும் இறுதிப் போட்டிக்குத் தெரிவான இந்தியா அணி இரண்டாவது தடவை கிண்ணத்தை இழந்துள்ளது. கடந்த முறையும் இந்த இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்து. விஷ்மி குணரட்ன 01 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, சாமரி அத்தப்பத்து, ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி ஓட்டங்களை உயர்த்தினார். சாமரி அதிரடியாக துடுப்பாட இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்ததுவிட்டது எனும் நிலையில் 87 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டது. சாமரி 61(43) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஹர்சிதா சமரவிக்ரமவுடன் ஜோடி சேர்ந்த கவிஷா டில்ஹாரி ஓட்டங்களை பெற இலங்கை அணிக்கு வெற்றி இலகுவானது. ஹர்சிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும், கவிஷா டில்ஹாரி ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தியா அணியின் பந்துவீச்சில் தீப்தி ஷர்மா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
முதலில் துடுப்பாடிய இந்தியா மகளிர் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸ்ம்ரிதி மந்தானா 60 ஓட்டங்களையும், ரிச்சா ஹோஸ் 30 ஓட்டங்களையும், ஜெமிமா ரொட்ரிகஸ் 29 ஓட்டங்களையும் பெற்றனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. 44 ஓட்டங்களை மந்தானா, சபாலி வர்மா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்களையும், உதேசிகா பிரபோதினி, சச்சினி நிஸ்ஸன்சலா, சாமரி அத்தப்பத்து ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.