ஊடகவியலாளர்களுக்கு நீதி இல்லாத நாட்டில் ஜனாதிபதியின் சந்திப்பு வீணானது என்பதுடன் வவுனியா ஊடக அமைய கடித தலைப்பில் பல கடிதங்கள் வழங்கப்பட்டமையையும் சுட்டிக்காட்டி வவுனியா ஊடக அமைய தலைவர் குமாரசிங்கம் கோகுலன் இராஜினாமா செய்துள்ளார்.
அவர் இராஜினாமா கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலே இன்றைய தினம் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஊடகவியலாளர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்காக போக்குவரத்து, உட்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு காலப்பகுதியில் நாடாளுமன்றில் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர்(தற்போதைய ஜனாதிபதி) ஊடக அமைச்சர் ஆகியோரை வடகிழக்கு ஊடகவியலாளர்கள் கூட்டாக சந்தித்த போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடக நண்பர்களிற்கான நீதியை தவிர வேறு எத்தகைய சலுகையினையும் கோரியிருக்கவில்லையென்பது அனைவரும் அறிந்ததே.
எட்டு ஆண்டுகள் கடந்துள்ள போதும் நீதி கோரிய பயணத்தில் ஆட்சியாளர்கள் ஒரு புள்ளியையேனும் கடந்திராத நிலையிலேயே இச்சந்திப்பானது காணப்படுகின்றது. அதிலும் ஜனாதிபதியின் வட,கிழக்கிற்கான பயணத்தில் ஊடகவியலாளர்களை புறக்கணித்து தற்போதைய ஜனாதிபதி செயற்படுகையில் கொழும்புக்கு தேடிச் சென்று சந்திக்க வேண்டிய தேவை ஏன்?
என்னைப் பொறுத்தவரை எமது காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட எமது நண்பர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயற்பாடாகவே இது அமைகின்றது என்பதே நிதர்சனம். எனவே இவ்வாறான செயற்பாடுகளிற்கு என்னால் துணை நிற்க முடியாத காரணத்தால் இதுவரை காலமும் வவுனியா ஊடாக அமையத்தின் தலைவராக இருந்த நான் இன்று(06.08) முதல் பகிரங்கமாக விலகிக்கொள்கிறேன்.
வவுனியா ஊடக அமையத்தினை பொறுத்த வரையிலே சங்கத்திற்கான யாப்பும் இல்லை, பதியப்படவும் இல்லை. இதற்கான பல முயற்சிகளை என்னால் எடுக்கப்பட்ட போதும் அதனை ஓரு கூட்டம் இணைந்து தடுப்பதற்கான திட்டத்தினை தீட்டி அதனை தடுத்துள்ளது. அத்துடன் இவர்கள் நினைப்பது மட்டுமே நடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஊடக அமையத்தினை தவறான முறையிலே நடாத்திச்செல்லும் நிலை காணப்படுகின்றது. இதற்கு உதாரணமாக ஜனாதிபதியுடனான சந்திப்பும் அவரிடம் மகஜர் கையளிக்கும் செயற்பாடும்.
இதுபோன்ற பல செயற்பாடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம் குறிப்பாக ஊடக அமையத்தின் கடித தலைப்பு அலுமாரியில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. ஆனால் பல கடிதங்கள் பல விடயங்களுக்கு வழங்கப்படுகின்றது அது எவ்வாறு என்று யோசியுங்கள். மேலும் கடந்த நிர்வாகத்தில் கணக்கு வழக்குகள் எதுவும் ஒழுங்காக இல்லாததுடன், பொதுச்சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகளிற்கு எந்தவித சிட்டைகளும் இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
சிலரின் மீதான பயம் காரணமாக இதனை யாரும் தட்டிக் கேட்காமல் உள்ளனர். இதைவிட வவுனியாவில் உள்ள பல ஊடகவியலாளர்களிற்கு முதுகெலும்பு இல்லை என்பதே யதார்த்தம். ஊடக சங்கங்களிலே பல ஊழல்களும், பிரச்சினைகளும் இருக்கும் போது இவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் சமூக பொறுப்பு என கதைக்கின்றனர்.
இதைவிட முக்கியமானது #USAID நிறுவனத்தால் வழங்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் ஒரு சிலரின் கைகளிலே காணப்படுவதுடன், இதனை கேட்ட போது கூட்டாக சேர்ந்து அச்சுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபடுகின்றனர். மேலும் அரசியல் சாயம் பூசப்பட்ட ஒருவரின் தன்னிச்சையான செயற்பாடுகளும், அவரிற்கு பின்னால் யாரும் இருக்கின்றனரோ என தோன்றுகின்றது.
எனவே இவர்களின் இவ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பயணிப்பது கடினமானதாக காணப்படுவதுடன் இதனால் எனது உயிருக்கு பாதுகாப்பில்லாத காரணத்தாலும் இப்பதவியில் இருந்து விலகுகின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.