
முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டப்பூர்வமானது என உயர்நீதிமன்றம் இன்று(09.08) தீர்ப்பினை வழங்கியிருந்த நிலையில், இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அமைச்சில் இன்று(09.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே அமைச்சுப் பதவியை ஏற்கத் தீர்மானித்ததாக ஹரின் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிக்காக எதிர் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு மாறவில்லை எனவும், அவ்வாறு நினைத்திருந்தால் அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நேரத்தில் அத்தகைய தீர்மானத்தை எடுத்திருக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னுடைய பொறுப்புக்களில் தான் சிறப்பாக கடமையாற்றியுள்ளதாகவும், பதவி விலகுவதற்கு இதுவே சரியான தருணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பதவிக்காலத்தில் சிறந்த சர்வதேச சுற்றுலா சபைக்கான விருதை இலங்கை பெற்றுக் கொண்டதாகவும், மக்களுக்கு காணி உரிமைகயை வழங்கும் ‘உறுமய’ திட்டத்திற்காக செயலாற்றியதாகவும், இலங்கை மகளிர் மற்றும் ஆடவருக்கான கிரிக்கெட் அணிகளின் அண்மைய வெற்றிகள் அவருடைய அர்ப்பணிப்புக்கு சான்றாகும் எனவும் விளையாட்டு அமைச்சில் இறுதியாக உரையாற்றும் போது ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.