
அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சிலருக்கு எதிராக தொடர்புடைய ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ரத்து செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (09.08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக, மனுதாரர்கள் தலா 150,000 செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அரசியல் ரீதியான பாதிப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜயதிலக மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் அடங்கியிருந்தனர்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னணியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பின்னணியை விசாரிக்கும் பணி அதன் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் வழக்குகளையும் ஆணைக்குழு விசாரித்தது.