மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பிணைக் கைதிகளாக இருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்கள் தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்டதுடன்
தாய்லாந்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை இலகுவாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த 56 இலங்கையர்களில் எட்டு பேர் மியன்மார் அரசாங்க அதிகாரிகளால் மார்ச் மாத தொடக்கத்தில் மீட்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மியன்மாரில் உள்ள தொடர்புடைய சைபர் கிரைம் முகாம்களில் மேலும் 28 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.