பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
2015ம் ஆண்டு முதல் 2019 வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்த வேலைத்திட்டத்தை, அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக, கொழும்பில் இன்று(29.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
” ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இது சாதாரண அறிக்கை அல்ல. அடுத்த ஐந்து வருடங்களில் இந்த நாட்டிற்கு முன்வைக்கப்படும் வேலைத்திட்டம் இதுவாகும்.
ஒவ்வொரு தேர்தலிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள். ஆனால் அந்த கொள்கை எப்படிச் செயல்படுத்தப்படும்? கொள்கையைச் செயல்படுத்துவதற்கான வழிமுறை என்ன? அதற்கான திட்டம் என்ன? போன்ற விடயங்கள் முன்வைக்கப்படுவதில்லை.
இதில் மலையக பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக பல்வேறு கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் பல்வேறு நபர்களின் கைக்கூலிகளாக மாறிவிட்டன” எனப் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.