ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் தபால் திணைக்களத்தினால் இன்று(03.09) ஆரம்பிக்கப்படவுள்ளது.
வாக்காளர் அட்டைகள் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று(02.09) தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாக்காளர் அட்டைகளைப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
மாவட்ட தேர்தல் செயலகம், அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் நாளை(04.09) தபால்மூல வாக்குகளை அளிக்க முடியும் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு, பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர் முதல் கட்டமாக வாக்களிக்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களும் தபால் மூலமாக வாக்களிக்கவுள்ளனர்.
04ம், 05ம் மற்றும் 06ம் திகதிகளில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.