ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம்(08.09) அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விநியோகிக்கும் பணிகள் தொடரும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11,12,13, மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிப்பதற்கான விசேட தினமாக இன்றைய தினத்தை அறிவித்து அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று(08.09) காலை 08 மணி முதல் மாலை 06 மணிவரை இந்தப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் தங்களது பகுதிகளுக்குப் பொறுப்பான தபால் அலுவலகத்துக்குச் சென்று தமது அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.