
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வெலிமடையில் இன்று (08.09) நடைபெற்ற மக்கள் பேரணியில் தலதா அத்துகோரளவும் இணைந்து கொண்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்தவான இவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக கடந்த மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தலதா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துக்கொள்வதற்காக நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்ததாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது.
மறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதியான காமினி அத்துகோரளவின் சகோதரியான அத்துகோரள, 2004ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 2010, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அவர் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 45,105 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.