
இரண்டு வருட காலமாகப் பல துறைசார் நிபுணர்கள் இணைந்து தயாரித்த 700 பக்கங்கள் விரிவான ஆய்வின் சுருக்கமே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(08.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன,
” நாம் மேம்பட்ட சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது இலக்கு. இதற்காக பத்து முக்கிய தூண்களை அமைத்துள்ளோம். இதில் ஊழல் ஒழிப்பு, கடன் பிரச்சனையை நிர்வகித்தல், நிதி மற்றும் பரிவர்த்தனை கொள்கைகள், வருமானம் அதிகரிப்பு, செலவைக் கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், அரசுத்துறை கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல், அரச சேவைகள் சீர்திருத்தம், மூலதன சந்தை சீர்திருத்தம், வலுவான சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் ஆகியன உள்ளடங்கும்.
ஊழலை ஒழிக்க புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் தங்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். ஊழல் செய்பவர்களிடமிருந்து சொத்துக்களை மீட்கவும் திட்டமிட்டுள்ளோம்.
மக்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் போன்றவற்றை எளிதாகப் பெற வேண்டும். இதற்கு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தப்பட வேண்டும். இலஞ்சம் கேட்கும் நடைமுறையை முற்றிலும் ஒழிப்போம்.
ஐக்கிய மக்கள் சக்தியில் புதிய கொள்கைகளுடன் புதிய தலைவர்கள் உள்ளனர். நாங்கள் இந்த நாட்டை மாற்ற விரும்புகிறோம். எங்களிடம் விரிவான திட்டங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.