இலங்கை எதிர் இங்கிலாந்து – இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் இலங்கை அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. இலங்கை அணியின் சிறந்த பந்துவீச்சு மூலமாக இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதன் மூலமே இந்த வாய்ப்பு உருவானது. அத்தோடு பத்தும் நிஸ்ஸங்க சிறந்த ஆரம்பம் ஒன்றை அதிரடியாக துடுப்பாட்டத்தில் வழங்கியுள்ளார்.

219 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாடி வரும் இலங்கை அணி இன்றைய நாள் நிறைவில் 15 ஓவர்களை எதிர்கொண்டு 01 விக்கெட்டை இழந்து 94 ஓட்டங்களை பெற்றுள்ளது. பத்தும் நிஸ்ஸங்க 53 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 30 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர். வெற்றி பெற இன்னமும் இலங்கை அணிக்கு ஓட்டங்கள் தேவை. தற்போது போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் ஏற்கனவே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 219 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் டான் லோரன்ஸ் 35 ஓட்டங்களை பெற்றார். இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடிய ஜேமி ஸ்மித் 49 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றார். இவர்கள் இருவரும் பெற்ற ஓட்டங்களே இங்கிலாந்து அணி 218 ஓட்டங்களை பெற காரணமாக அமைந்தது. இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக துடுப்பாடியுள்ள நிலையில் மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் பத்தும் நிஸ்ஸங்க இனி வரும் காலங்களில் விளையாடுவர் என நம்பலாம். அடுத்து இலங்கையில் நடைபெறவுள்ள நியூசிலாந்து அணியுடனான தொடரில் பிரகாசித்தால் அது உறுதியாகிவிடும்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், அசித்த பெர்னாண்டோ 2 விக்கெட்களையும், மிலான் ரத்நாயக்க ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் 61.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது 263 ஓட்டங்களை பெற்றது. இன்றைய மூன்றாம் நாள் ஆரம்பிக்கும் போது பலமாக இலங்கை அணி காணப்பட்ட போதும், மேலதிக ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 62 ஓட்டங்களினால் முன்னிலை பெற்ற நிலையில் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர். இன்றைய நாளில் இதுவரை 16 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா 69 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 64 ஓட்டங்களையும் பெற்றனர். 127 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்தனர். ஆரம்பத்தில் பத்தும் நிஸ்ஸங்க 51 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்த இன்னிங்ஸ் அவருக்கு டெஸ்ட் மீள்வருகை ஒன்றை வழங்கியுள்ளது. இந்த மூவரையும் தவிர குஷல் மென்டிஸ் 14 ஓட்டங்களையும், அசித்த பெர்னாண்டோ 11 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனையோர் இரட்டை படை இலக்கத்தை கூட தொடவில்லை.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜோஷ் ஹல், ஒலி ஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள். க்றிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். சொஹைப் பஷீர் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்தது 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஒல்லி பொப் 154 ஓட்டங்களை 156 பந்துகளில் பெற்றுக்கொண்டார். அதன் மூலமே இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. பென் டக்கெட் 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் மிலான் ரத்நாயக்க 3 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, தனஞ்ஜய டி சில்வா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

ஓவல் மைதானத்திலிருந்து விமல்

Social Share

Leave a Reply