சர்வதேச போட்டிகளிலிருந்து இங்கிலாந்தின் மொயின் அலி ஓய்வு

சர்வதேச போட்டிகளிலிருந்து இங்கிலாந்தின் மொயின் அலி ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொயின் அலி அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மொயின் அலி ஓய்வு பெறவுள்ளமை தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவிக்கையில், “எனக்கு 37 வயதாகிவிட்டது, இம்மாதம் நடைபெறவுள்ள அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான தொடருக்கு என்னைத் தெரிவு செய்யவில்லை. நான் இங்கிலாந்து அணிக்காக அதிக நாட்கள் விளையாடி விட்டேன். இனி அடுத்த தலைமுறையினருக்கான காலம்” எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

2014ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகிய மொயின் அலி, இதுவரையில் 68 டெஸ்ட் போட்டிகளிலும், 138 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் மற்றும் 92 டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும், 8 சதங்கள், 28 அரை சதங்கள் உட்பட 6678 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 366 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 2014ம் ஆண்டிலிருந்து, 5000 மேற்பட்ட ஓட்டங்களையும் 200 அதிகமான விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ள 4 வீரர்களில், பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன், மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் மற்றும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருடன் மொயின் அலியும் இடம்பெற்றுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கிண்ணத் தொடரின் இந்தியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மொயின் அலி இறுதியாகக் களமிறங்கியிருந்தார்.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள போதும் எதிர்வரும் காலங்களில் பிரிமீயர் லீக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும், பயிற்சிவிப்பாளராக செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் மொயின் அலி தெரிவித்துள்ளார்.  

Social Share

Leave a Reply