கேட்ட கேள்விக்கு பதிலளிக்காத அநுர விவாதத்திற்கு அழைக்கிறார் – ஜனாதிபதி

கேட்ட கேள்விக்கு பதிலளிக்காத அநுர விவாதத்திற்கு அழைக்கிறார் - ஜனாதிபதி

திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்று கேட்டதற்குப் பதிலளிக்காத அநுர தன்னை விவாதத்திற்கு அழைக்கிறார். தன்னுடன் விவாதத்திற்கு வர முன்னர் அநுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தனியாக விவாதம் நடத்தி நாட்டுக்குத் தமது சரியான பொருளாதாரக் கொள்கையைச் கூற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குருநாகல் அஸ்லியா கோல்டன் கிரசென்டா ஹோட்டலில் நேற்று (10.09) பிற்பகல் நடைபெற்ற குருநாகல் மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், 8,900 பில்லியன் ரூபாய் செலவும், 4,900 பில்லியன் ரூபாய் வருமானமும், 4,000 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையும் கொண்ட நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் கொள்கைப் பிரகடனத்தை அனுரகுமார திஸாநாயக்க ஏன் தனது விஞ்ஞாபனத்தில் வெளியிட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, மேடைகளில் பொய்யாகக் கூச்சல் எழுப்பாமல் தமது சரியான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி நாம் செயல்பட்டால், கடன் பெறுவதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கும். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் இந்நாட்டின் செலவு 6,800 பில்லியன் ரூபாயாகவும், வருமானம் 5,100 பில்லியன் ரூபாயாகவும் காணப்படுவதோடு, இடைவெளி 1700 பில்லியன் ரூபாயாகக் காணப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும். எனவே, இந்த இடைவெளியை நிரப்பும் இயலுமையும் எமக்கு உள்ளது.

ஆனால் ஜேவிபி தருவதாக கூறும் நிவாரணங்களை வழங்கினால் செலவு 8,900 கோடி ரூபாயாகவும், வருமானம் 4,900 பில்லியன் ரூபாயாகவும் காணப்படும். அத்தோடு வரிக் குறைப்பு தொடர்பிலும் பேசுகின்றனர். அதன்படி வரவு செலவுத் திட்ட இடைவெளி 4000 பில்லியன் ரூபாயாக அமையும். பின்னர் பட்ஜெட் இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.9 சதவீதமாக காணப்படும். இவ்வாறான பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால், வட்டி 25% ஆக இருக்கும். இப்படியான மாற்றத்தையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்?

அதனால் டொலரின் பெறுமதி 500 ரூபாயாக உயர்வடையும். சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை மீறிவிட்டால் அவர்களின் ஆதரவு இரத்தாகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அண்மையில் அனுரகுமார திஸாநாயக்கவும் களனி பிரதேசத்தில் ஏற்றுமதி பொருளாதாரத்தையும் நடைமுறைப்படுத்துவதாக கூறியிருந்தார்.

ஆனால் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாகவும் அவரின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இன்றி எவ்வாறு ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல முடியும்? சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களினாலேயே பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப சுதந்திரம் கிடைக்கும்.

நான் முன்பே அழைப்பு விடுத்ததுபோல் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருடன் நானும், அநுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்கும் பகிரங்க சந்திப்பொன்றை நடத்துவோம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் சஜித் பிரேமதாசவையும் அழைக்கலாம். சஜித் பேச ஆரம்பித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளருக்கு பேச நேரம் எஞ்சாது. இருப்பினும் சஜித்தையும் அழைப்போம்.

எனவே, அவரின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா இறக்குமதி பொருளாதாரமா என்பதை அநுரகுமார திசாநாயக்க எமக்கு முதலில் கூற வேண்டும். பொருளாதாரத்தை நாசமாக்கி நாட்டை வங்குரோத்து அடையச் செய்யக்கூடிய வரவு செலவு திட்ட யோசனைகளை முன்மொழிந்திருப்பது ஏன் என்று அவர்களிடம் கேட்கிறேன். அதனால் மேடைகளில் கோசமிடுவதை நிறுத்திவிட்டு சரியான பொருளாதார திட்டத்தைத் முன்மொழியுமாறு அறிவுறுத்துகிறேன்.”

Social Share

Leave a Reply