இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 202 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ளது.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று(20.09) 6 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 50 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து, சகல விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸிற்காக 340 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன்படி, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் நிறைவில் 35 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
நேற்றைய நாள் நிறைவில் களத்திலிருந்த டேரில் மிட்செல் 57 ஓட்டங்களுடனும், டாம் ப்ளூன்டெல் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்கக் களத்திற்கு வந்த ஏனைய வீரர்களும் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். க்ளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை சார்பில் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களையும், ரமேஷ் மென்டிஸ் 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பத்தும் நிசங்க 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமல் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முதல் இன்னிங்ஸில் சதம் கடந்த கமிந்து மென்டிஸ் 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அஞ்சலோ மெத்தியூஸ் 34 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.
நியூசிலாந்து அணி சார்பில் வில்லியம் ஓர்ர்கே 3 விக்கெட்டுக்களையும், அஜாஸ் படேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை (21.09) நடைபெற வேண்டுமென்ற போதும், ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை மறுநாள் (22.09) தொடரவுள்ளது.
போட்டியின் இரண்டாம் நாள் விபரம்,
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (19.09) காலை ஆரம்பமாகியது.
3 விக்கெட்டுக்கள் மீதமிருக்க இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, 4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸிற்காக 305 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
முதலாம் நாள் ஆட்டநேர முடிவின் போது களத்திலிருந்த பிரபாத் ஜயசூரிய ஓட்டங்கள் இன்றியும், ரமேஷ் மென்டிஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் களத்திற்கு வந்த அசித்த பெர்னாண்டோவும் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் வில்லியம் ஓர்ர்கே 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர், முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, டாம் லாதம் 70 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 55 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
அதன்படி, நியூசிலாந்து அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டேரில் மிட்செல் 41 ஓட்டங்களுடனும், டாம் ப்ளூன்டெல் 18 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
போட்டியின் முதலாம் நாள் விபரம்,
காலி சர்வதேச மைதானத்தில் கடந்த 18ம் திகதி ஆரம்பமாகிய போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பத்தும் நிசங்க அதிரடியாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த போதும் 25 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். மறுபுறம், தினேஷ் சந்திமல் 30 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 11 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, களத்தில் இணைந்த கமிந்து மென்டிஸ், குசல் மென்டிஸ் ஜோடி 103 ஓட்டங்களை இணைப்பட்டமாகப் பெற்று அணிக்கு வலு சேர்த்தது. குசல் மென்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.
7வது டெஸ்ட் சதத்தைக் கடந்த கமிந்து மென்டிஸ், இன்றைய நாள் ஆட்டம் நிறைவடைய இரு ஓவர்கள் மீதமிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 114 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இனுடாக 4 டெஸ்ட் சதங்களை விரைவாகக் கடந்த இலங்கை வீரராக கமிந்து மென்டிஸ் பதிவானர்.
போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை 7 விக்கெட் விழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் வில்லியம் ஓர்ர்கே 3 விக்கெட்டுக்களையும், க்ளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுக்களையும், டிம் சவுதி, அஜாஸ் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் பெற்றிருந்தனர்.
இலங்கை XI: திமுத் கருணாரத்ன, பத்தும் நிசங்க, தினேஷ் சந்திமல், அஞ்சலோ மெத்தியூஸ், கமிந்து மென்டிஸ், தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), குசல் மென்டிஸ், ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ
நியூசிலாந்து XI: டாம் லாதம், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி(அணித் தலைவர்), அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே