மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை அமைக்கும் திட்டங்களைக் கைவிடக் கோரியும் , அதற்கான ஒப்பந்தங்களை இரத்துச் செய்யக் கோரியும், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) மன்னார் மக்களினால் கையெழுத்திடப்பட்ட முறைப்பாட்டு தபாலட்டைகளச் சேகரித்துக் கடந்த வாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்திருந்தது
அதன் தொடர்ச்சியாக, மன்னார் முழுவதும் முறைப்பாட்டுத் தபாலட்டைகள் சேகரிக்கப்பட்டு மன்னார் பிரதான தபால் நிலையத்தினூடாக இன்று(01.10) ஜனாதிபதி மற்றும் பிரதமர் காரியாலயத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த MSDEO நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ,
“மன்னார்த் தீவின் அபிவிருத்தி என்கிற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி, மற்றும் கனிய மண் அகழ்வானது மன்னார்த் தீவிற்குப் பாரிய அழிவினையே ஏற்படுத்தும். அபிவிருத்தி செய்வதாயின் மன்னார்த் தீவிற்கு வெளியே போதிய நிலங்கள் உள்ளன. அபிவிருத்திகளை அங்கு மேற்கொள்ள முடியும். கடல் மட்டத்திலிருந்து சிறிதளவே உயரமான இந்தச் சிறு தீவிற்குள் இவ்வாறான அபிவிருத்திகள் வேண்டாம் என்பதே மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
கடந்த காலங்களில் இந்த அபிவிருத்திக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தும் அரசாங்கம் அதனைக் கருத்திற் கொள்ளாத நிலையில்,
தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடியான கவனத்தை ஈர்க்கும் முகமாகவே இந்த தபால் மூல முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்