நாட்டில் இன்று(07.10) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 48 மணித்தியாலங்களில் மூன்று வெவ்வேறு கொலை சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
வெலிபென்ன பிரதேசத்தில் 75 மற்றும் 67 வயதுடைய வயோதிப தம்பதியினர், அவர்களின் வீட்டினுள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கெசெல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுக் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று(07.10) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மற்றுமொரு நபருடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதலின் போது குறித்த பெண் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கெசெல்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், குச்சவெளி பகுதியில் கடந்த 05ம் திகதி நபர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 30 வயதுடைய நபர் நேற்று(06.10) உயிரிழந்துள்ளார்.
சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் குறித்த நபர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கு குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்