
2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு(09.10) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் கவுர் 52(27) ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 50(38) ஓட்டங்களையும், ஷபாலி வர்மா 43(40) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்
இலங்கை சார்பில் பந்து வீச்சில் சமரி அத்தபத்து, அமா காஞ்சனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
173 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் கவிஷா தில்ஹாரி 21(22) ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 20(22) ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள ஏனைய வீரர்கள் பத்துக்கும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் பந்து வீச்சில் ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ரேணுகா சிங் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன்படி, இந்தியா மகளிர் அணி 82 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது. மகளிர் டி20 உலக கிண்ணத்தில் அதிக ஓட்ட எண்ணிக்கை வித்தியாசத்தில் இந்தியா பெற்றுக்கொண்ட வெற்றி இதுவாகும்.
குழு Aயில் உள்ள இலங்கை இதுவரை பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்தியா பங்கேற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றியீட்டி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.
