பாராளுமன்றத்தில் போராட்டம் ஒன்று தற்சமயம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தை புறக்கணிக்கும் முகமாகவும், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தனவுக்கு எதிரான போராட்டமாகவே இந்த போராட்டம் அமைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் மனுஷ நாணயக்கார உரையாற்றும் போது, அவருடைய நேரம் முடிவடைய முன்னரே அவருடைய உரை சபாநாயகரினால் நிறுத்தப்பட்டதாக கூறி சர்ச்சை ஒன்று உருவானது.
அந்த சர்ச்சையில் பாராளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தப்பட்டதோடு, பாராளுமன்ற சபைக்கு வெளியேயும் அவர் அச்சுறுத்தப்பட்டு தாக்க முனைந்ததாக எதிர்க்கட்சி தெரிவித்திருந்தது.
இந்த சம்பவங்களை கண்டித்தும், அரசாங்கத்தின் பாராளுமன்றத்துக்குள் வேணுமுறைகளை கண்டித்தும், பாராளுமன்ற முன்றலில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், பதாதைகளுடன் தமது எதிர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
இதன் போது உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள் மீறப்படுவதாகவும், பாராளுமன்றத்துக்குள் அரசாங்கம் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்த அதேவேளை, சபாநாயர்களுக்கு எதிரான கருத்துக்களையும் முன் வைத்தார்.
“சபாநாயகர் சமநிலையுடையவராக இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் அவ்வாறு செயற்படவில்லை. ஒரு தலை பட்சமாக நடந்து கொள்கிறார். சபாநாயகர் கதிரைக்குரிய மரியாதையினை வழங்கவில்லை. பாராளுமன்றத்துக்குரிய சிறப்பம்சங்கள் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. சபாநாயகர் இவற்றை உணர்ந்து கொண்டு சரியாக நடந்துக் கொள்ளவேண்டும்” என கோரிக்கையினை முன் வைத்தார்.
