ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 07 விக்கெட்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியுள்ளது. முதல் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி அரை இறுதியில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை 19 வயது அணி 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் லக்வின் அபேயசிங்க 72 ஓட்டங்களையும், சாருஜன் சண்முகநாதன் 42 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா 19 வயது அணி சார்பாக பந்துவீச்சில் சேட்டன் ஷர்மா 3 விக்கெட்களையும், கிரண் கோர்மலே மற்றும் ஆயுஸ் மாத்ரே ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பத்திலுக்கு துடுப்பாடிய இந்தியா 19 வயது அணி 21.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது. இதில் 13 வயதான வைபவ் சூரியவன்ஷி 36 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஆயுஸ் மாத்ரே 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இருவரும் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 91 ஓட்டங்களை பகிர்ந்தனர். விகாஸ் தெவ்மிக, விரான் சமுத்தித, பிரவீன் மனீஷ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.