பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அது சம்பந்தப்பட்ட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக உறுதியளித்ததை அடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (08/12) பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதுதொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (07/12) சபாநாயகரை சந்தித்து நிலைமை குறித்து கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் கூடிய பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் தாக்கமுற்பட்டதாக தெரிவித்து, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வரவு – செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொள்ளாது கடந்த திங்கட்கிழமை முதல் (06/12) தவிர்த்து வந்தனர்.
அத்துடன் பாராளுமன்றில் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தக்கோரி சபாநாயகரிடம் வலியுறுத்தியும் இருந்தனர்.
