முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது உத்தியோகபூர்வ வீட்டை விட்டு வெளியேறுமாறு தான் கூறியுள்ளது தனிப்பட்ட பழிவாங்கல் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். புதிய அரசியல் கலாச்சரத்தை உருவாக்கும் முயற்சியே இதுவென அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பதவிக்காலம் நிறைவடைந்த ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில்லை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி வரிச்சலுகை வழங்குவதில்லை போன்றவறை புதிய அரசியல் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசிக்கும் வீட்டுக்கு 46 இலட்சம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை அவர் செலுத்த வேண்டுமெனவும், இல்லாவிட்டால் அதனை விட்டு வெளியேறி வேண்டும் என ஒரு நிகழ்வில் ஜனாபதிபதி உரையாற்றியிருந்தார். “இது அரசியல் பழிவாங்கல். நான் மஹிந்த ராஜபக்ஷ, இவற்றையெல்லாம் நான் பார்த்தவன். வீட்டை விட்டு வெளியேற நான் தயார். ஜனாதிபதி கடிதம் அனுப்பினால் உடனடியாக நான் வெளியேறுவேன்” என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு விஜேராமாவில் உள்ள வீட்டின் நிலம் ஒரு ஏக்கர் 13 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த வீடு 30,500 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த வீட்டின் அரசாங்க மதிப்பீடு ரூ. 3,500 மில்லியன். அரசாங்க மதிப்பீட்டுத் துறையின்படி, இந்த வீட்டின் மாத வாடகை ரூ. 46 இலட்சம் ஆகும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு கொழும்பில் உள்ள டொரிங்டனில் உள்ள அவரது இல்லத்திற்காக 15,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு ஒதுக்கப்பட்டது. அதன்படி, அவர் 9,000 சதுர அடிக்கு மேல் வீட்டையும், 4,000 சதுர அடி அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் 2,000 சதுர அடி அவரது அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டது. அவரது குடியிருப்பு வாடகைக்கான அரசாங்க மதிப்பீடு ரூ. 20 இலட்சம் ஆகும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார், அரசாங்க மதிப்பீட்டால் மாத வாடகை மதிப்பு ரூ. 900,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சொந்த வீட்டில் வசிப்பதாகவும் அதற்கு தான் நன்றி கூறுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்க வீட்டை பெறவில்லை. சொந்த வீட்டில் வசிக்கிறார்.
“எனது ஓய்வுக்கு பின்னர் எனக்கு வீடோ, பாதுகாப்போ தேவையிலை. நான் இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாக வேலை செய்ய வேண்டும். இதனை எழுத்து மூலம் எழுதி உறுதியளிக்கிறேன்” எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.