இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின்போது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனங்களை வெளியிடுவதாக இலங்கையிலுள்ள இந்தியா உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக்கு அருகாமையில் இன்று(28.01) அதிகாலை 13 இந்திய மீனவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளின்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த மீன்பிடிப் படகிலிருந்த 13 மீனவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை சிறு காயங்களுக்குள்ளான ஏனைய மூன்று மீனவர்களுக்கும் அதற்காக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் மீனவர்களைப் பார்வையிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலய அதிகாரிகள், அவர்களை நலன் விசாரித்து அவர்களது தேவைகள் குறித்து அறிந்துகொண்டு மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமான சகல சாத்தியமான உதவிகளையும் வழங்கிவருகின்றனர்.
புது டில்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகர் அவர்கள் இன்று காலை வெளியுறவுத் துறை அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இச்சம்பவம் தொடர்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பில் உள்ள எமது உயர் ஸ்தானிகராலயம் இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளது.
வாழ்வாதாரம் தொடர்பான அக்கறையினை கவனத்தில்கொண்டு மீனவர்கள் விவகாரத்தினை பரிவுடனும் மனிதாபிமான அடிப்படையிலும் அணுகவேண்டியதன் அவசியத்தை இந்திய அரசாங்கம் எப்பொழுதும் வலியுறுத்தி வருகின்றது. எந்த சந்தர்ப்பத்திலும் எக்காரணத்துக்காகவும் பலத்தை பயன்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பாக இரு நாடுகளினதும் அரசாங்கங்கள் இடையில் ஏற்கனவே உள்ள புரிந்துணர்வுகள் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படவேண்டும் எனவும் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.