கொலை குற்றம் சுமத்தப்பட்டவர் ஆளுநரா?

வடமேல் ஆளுநராக நியமிக்கப்பட்ட வசந்த கரன்னகொடவின் நியமனம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அன்றைய போராட்டங்கள் மனதில் நிழலாடும் நிலையில் முன்னாள் கடற்படை தளபதிக்கு தற்போதைய அரசாங்கம் பாராட்டி ஆளுநர் பதவி வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட மீது, இறுதி யுத்தம் நடந்த 2008, 2009 காலப்பகுதிகளில் கொழும்பில் வசதி படைத்த தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 11 பேரை கப்பம் பெறும் நோக்கில் வெள்ளை வேன் மூலம் கடத்தி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றது.

அக்காலப்பகுதியில் எனது தலைமையிலான ‘மக்கள் கண்காணிப்பு குழு’ இந்த கொடுமையை பதிவு செய்து உலகிற்கு அறிவித்தது. இதற்காக எனக்கும் அச்சறுத்தல் பரிசாக கிடைத்தது. “வந்து சுட்டு விட்டு போங்கடா” என நான் சொன்னேன்.

கடத்தப்பட்ட இளைஞர்களின் உடல்கள் கூட இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் காணாமல் போன பிள்ளைகளின் தாய்மார்கள் அழுத அழுகை இன்னமும் என் நெஞ்சில் ஒலிக்கிறது. அன்றைய போராட்டங்கள் மனதில் நிழலாடுகின்றன.

கொழும்பு எம்பியாக, மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளராக, நான் மற்றும் ரவிராஜ், சிறிதுங்க, விக்கிரமபாகு, பிரியாணி ஆகியோர் அச்சறுத்தல்களுக்கு மத்தியில் பலரை காப்பாற்றினோம். பல கடத்தல்களை தடுத்து நிறுத்தினோம்.

வெள்ளை வேன் கடத்தல்கள், பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக ஆரம்பித்து, இதுபோன்ற கப்பம் பெறவேண்டி நிகழ்ந்தன. 2019ஆம் வருடத்தில் சட்டபூர்வமாக வசந்த கரனாகொட மீது சாட்டப்பட்ட இந்த குற்றச்சாட்டு மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

இன்று, இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின், கடந்த மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகளையும், வழக்கையும் சட்டமா அதிபர் வாபஸ் பெற்றார். கரனாகொட சுதந்திர மனிதனாக நடமாடுகிறார். இன்று அவரது சாதனையை பாராட்டி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படுகிறார்” என மனோ எம்.பி மேலும் தெரிவித்தார்.

கொலை குற்றம் சுமத்தப்பட்டவர் ஆளுநரா?

Social Share

Leave a Reply