
கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் தொடர்புடைய குழுவினருடனான சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.இதன்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
விசேட தேவையுடையவர்கள் பொதுச் சமூகத்தில் இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க தேவையான சமூக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். Clean sri lanka திட்டத்தினூடாகவும் நாம் அதனை செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
எமது நாட்டில் பல கொள்கைகள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் பிரச்சனை. நாம் பார்ப்பது போல், கொள்கைகளை செயற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கிய விடயம். 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு குறிப்பாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்வியை ஒரு தலைப்பாக மாற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்கு தேவையானவர்களை நியமித்துள்ளோம்.
கல்வியில் ஒரு பாரிய மாற்றத்திற்கு நாம் இப்போது தயாராகி வருகிறோம். 2025 ஆம் ஆண்டு இது தொடர்பான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு, 2026 இல் இதை நடைமுறைப்படுத்தத் தொடங்குவோம். இது முழு முறைமையையும் மாற்றும் நீண்ட காலத் திட்டம். நிச்சயமாக, விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வி முறைக்கு விசேட கவனம் செலுத்தப்படும்.
அனைத்து பாடசாலைகளிலும் விசேட தேவையுடைய பிள்ளைகள் வழமை போன்று கல்வியில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். ஆனால் இது ஒரு பெரிய செயன்முறை.படிப்படியாக அந்த இலக்குகளை அடைவோம் என்று நம்புகிறோம்.
முதற்கட்ட நடவடிக்கையாக, ஒரு கல்வி நிர்வாக வலயத்தில் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையிலாவது இந்த பிள்ளைகளை கல்வி கற்க தகுதியுடையவர்களாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என மேலும் தெரிவித்தார்.