
சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தற்காரர்கள், கொலைகாரர்கள் ஆகியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று (23.02 ) முன்னெடுக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றன.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வெற்றியளிப்பதற்கு முழு அர்பணிப்புடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் இவ்விடத்தில் தனியார் பங்களிப்பும் இருந்தால் அது மேலும் சிறப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.
நாடு முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் குப்பைகளை அப்புறப்படுத்தல் மாத்திரம் அல்ல. இனவாதம், மதவாதம், ஊழல், மோசடிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கடற்றொழில், நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர், மாணவர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
பிரதேச அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தன.
அதைப்போல இந்த க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு, தெற்கு மலையகம் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளன.