அனுராதபுரம் வைத்திய சாலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) ஏற்பாட்டில். இன்றைய தினம்(15.03) சனிக்கிழமை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால், ஊடக மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.
குறித்த ஊடக சந்திப்பில் 30 இற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, பெண் வைத்தியருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கண்டனம் வெளியிட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள் வலையமைப்பினர்,
“அனுராதபுரம் வைத்தியசாலையில் அந்த பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த கொடுமையானது பல பெண்களுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பெண்கள் சுதந்திரமாகப் பணியாற்றி வரும் இந்த காலகட்டத்தில் இப்படியான சம்பவங்கள் நமது நாட்டில் நடைபெறுவது மிகுந்த வேதனை யளிக்கிறது.
எங்கள் நாட்டின் பிரதமருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்,அவரும் ஒரு பெண் என்ற வகையில் பெண்களுடைய உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்தோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்
இந்த நாட்டில் சிறுவரும் பெண்களுமே அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இப்போது பெண்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்க வேண்டிய சூழல் வந்து விடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் இனிமேலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டு நிற்கின்றோம்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு அவரது வசிப்பிடத்தில் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த வன்கொடுமையானது ஒரு தனிப்பட்ட பெண்ணின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்த நாட்டின் ஒவ்வொரு பெண்களின் மீதும் நடாத்தப்பட்ட கண்ணியம் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை மீதான தாக்குதலாகும்.எனவே மாண்புமிகு பிரதமருக்கு நாங்கள் ஒரு வலுவான வேண்டுகோளை விடுக்கின்றோம். குற்றத்தை புரிந்தவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் நீதி வழங்குவதில் தயவும் தாமதமும் சமரசமும் இருக்கக் கூடாது இவ்வாறான செயல்கள் மீண்டும் அனுமதிக்கப்படக்கூடாது எந்த ஒரு பெண்ணும் ஒரு மருத்துவரோ, மாணவரோ
தாயோ, தனது பாதுகாப்பிற்காக அச்சப்படாத வகையில் முறையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகளாவிய ரீதியில் பெண்களை கொண்டாடுவதற்கு என அர்ப்பணிக்கப்பட்ட இந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றிருக்கும் இச்சம்பவமானது பெண்களுக்குப் பேரிழிவை ஏற்படுத்தியுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராணுவ சிப்பாய் ராணுவத்தில் இருந்து தப்பி வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. சமீப காலங்களில் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய அல்லது பதவிகளில் இருந்து விலகியவர்களால் இவ்வாறான பாரிய குற்றங்கள் விளைவிக்கப்படுகின்றன இது நமது ஆயுதப் படைககள் மீது ஒழுக்கம் மற்றும் பொறுப்பு கூறல் சம்பந்தமான கடுமையான கேள்விகளை எழுப்பி நிற்கின்றது. தேசத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே இவ்வாறான கொடூரமான செயல்களில் ஈடுபடும் போது பொதுமக்கள் அவர்களை எப்படி நம்புவது என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுபோன்ற தப்பித்தல்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை குறித்து அரசாங்கம் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த நிகழ்வு குறித்து நாடு முழுவதும் வைத்திய சமூகம் வெளியிட்ட சீற்றத்தை நாம் ஒப்புக் கொள்கிறோம் நாடு முழுவதும் வைத்திய சமூகம் மேற்கொண்ட வேலை நிறுத்தம் மற்றும் நீதிக்கான கோரிக்கை அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி நிற்கிறது .இவ்வாறு அவர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டால் பாதிக்கப்படப் போவது நம் குடிமக்களே இவ்வாறான செயற்பாடுகளினால் மகத்தான வைத்திய சேவை என்பது இடைநிறுத்தப்படக்கூடாது. எனவே நாங்கள் பிரதமரிடம் தயவாக கேட்டுக்கொள்கிறோம்.பாதிக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி வேண்டும் மேலும் இவ்வாறான சம்பவங்களுக்கு இனிமேலும் இடமளிக்கக் கூடாது என நாங்கள் வேண்டி நிற்கிறோம்” என தெரிவித்தனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்