கச்சத்தீவு விவகாரம் – தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை தமிழக முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்வைத்துள்ளார். இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும்
அனைத்து இன்னல்களைப் போக்கவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.” என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள
வேண்டுமென்றும், இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும்
விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்றும் பேரவையில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித்
தர வேண்டும் எனவும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

இப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

‘தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை ஆழ்ந்த கவலையுடன் இந்த மன்றத்தில்
நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது.

அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.” என சுட்டிக்காட்டினார்.

இத்தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதன்அடிப்படையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Social Share

Leave a Reply