மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய மக்களுக்கு உரிமை உண்டு என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹேவ்லொக் பிளேஸில் உள்ள மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் நேற்று (21.04) திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆசீர்வாத பூஜையிலும் பிரதமர் பங்கேற்றார்.
“கொழும்பு நகரம் பல்வகைமை நிறைந்த ஒரு நகரம். இந்த சிறிய நிலப் பரப்பில் பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்.” கொழும்பு நகரம், மிகவும் செல்வந்தர்கள் முதல் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதவர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் வாழும் ஒரு நகரமாகும். அதனால் இங்கு தேவைகள் அதிகம். கொழும்பு என்பது இலங்கையின் இதயம்.
ஆனால் இன்றும் கூட கொழும்பு நகரில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அதேபோல், கொழும்பு மாநகர சபைக்கு ஆண்டுதோறும் அதிக வருமானம் கிடைக்கிறது. நீங்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு என்ன நடக்கின்றது என்று நீங்கள் சிந்திக்க முடியும்.
அதனால்தான் கொழும்பு மாநகர சபை ஊழல் இல்லாத ஒரு குழுவின் கைகளில் ஏன் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். “தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள குழு அத்தகைய ஒரு குழு என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்,” என்று பிரதமர் கூறினார்.
இந்த மக்கள் சந்திப்பில் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தாசர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் உட்பட பல பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.