தமிழர்கள் வாயை மூடிக் கொண்டிருங்கள் என சொல்லும் நிலை உருவாகிறது – செல்வம் MP

தமது கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே கூடுதலான நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி கூறியது மிரட்டலான விடயம் என்ன செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று(22.04) காலை மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்விலே கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

“உள்ளுராட்சி சபைகளை ஆட்சி அமைப்பது தமது கட்சியாக இருந்தால் மட்டும் எவ்வித பாரபட்சம் இன்றி நிதியை ஒதுக்குவதாக ஜனாதிபதி கடந்த வாரம் மன்னாரில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றி மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதே அவரின் செய்தியாக உள்ளது. அவரது கருத்தை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்த்தார்கள்”

“இது மக்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு பெறுவது போன்ற ஒரு விடயம் எனவே இவ்வாறு கூறுகிற
ஜனாதிபதி எவ்வாறு இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும்? அத்தோடு,ஜனாதிபதியினுடைய கூற்றிற்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் அருகதையற்றவர்கள் என ஜனாதிபதிக்கு ஆதரவாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது குரலை உயர்த்தியுள்ளார்” என செல்லம் அடைக்கலநாதன் சுட்டிக் காட்டினார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவான ஆசனங்களை வழங்கியுள்ளனர். அதை வைத்துக் கொண்டு தமிழ்த் தலைமைகள் பேசுவதற்கு வல்லமையற்றவர்கள் என்று சொல்லுவதற்கு என்ன யோக்கியதை உள்ளது என்று நான் கேட்கிறேன்?

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தினீர்களா ? ஐ.நா.சபை தீர்மானத்தை உடனடியாக அமுல் படுத்த முடியாது என்று கூறினீர்கள். இதுதான் தமிழர்கள் சார்பாக நீங்கள் காட்டுகின்ற அக்கறையா?.

பாராளுமன்றத்திலும்,வெளியிலும் அரசியல் கைதிகள் சிறைகளில்  இல்லை என்று கூறினீர்கள். இதுதானா நீங்கள் காட்டுகிற அக்கறை? தமிழ் தலைவர்கள் இதற்கு எல்லாம் குரல் கொடுத்தால், “நீங்கள் பேச முடியாது” என அதிகார தொனியில் தெரிவிக்கிறீர்கள்.

அரசாங்கத்தை எதிர்க்கும் வகையில் தென் பகுதியில் சிங்கள தலைவர்கள் வாரித் தூற்றுகின்றனர் . அவர்களைப் பார்த்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எதுவும் கதைக்கவில்லை. ஆனால் தமிழ் தலைவர்களைப் பார்த்து அருகதையற்றவர்கள் என்று கூறுகிறார். நாளைக்கு இந்த நகர சபை, பிரதேச சபை மாகாண சபை மாறுமாக இருந்தால் தமிழ் மக்கள் அனைவரும் வாயை மூடிக் கொண்டிருங்கள் என்று சொல்லுகிற சந்தர்ப்பம் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே பிமல் ரத்னாயக்காவுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் யோக்கியதையும் இல்லை என்பதை நான் இங்கு வெளிப்படையாக கூறுகிறேன் என்றார்.

குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினி நிசாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply