அமெரிக்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் குறித்து அரசாங்கம் அறிக்கை

பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகத்துடன் வொஷிங்டன் டிசியில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

இலங்கையின் தூதுக்குழுவினர் வொஷிங்டன் டிசியிலுள்ள ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகத்தில் கடந்த 22ஆம் திகதி அதன் தூதுவர் Jamieson Greer-ஐ சந்தித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதுவர் Jamieson Greer-க்கு அனுப்பப்பட்ட கடிதப் பரிமாற்றத்தின் மூலப்பிரதி, நிதி அமைச்சர் ஜனாதிபதமி அனுர குமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய இலங்கை தூதுக்குழுவினரால் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் முகங்கொடுத்த சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை வெற்றிகொள்வதற்கும் பொருளாதாரத்தை மீண்டும் முழுமையாகக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பிரதிநிதிகளால் தூதுவர் Jamieson Greer க்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக பற்றாக்குறை தொடர்பாகவும், தீர்வை வரி மற்றும் தீர்வை அற்ற தடைகளை மட்டுப்படுத்த அமெரிக்காவுடன் செயலாற்ற இலங்கை கொண்டிருக்கும் துரித மற்றும் முன்னேற்றகரமான அர்ப்பணிப்பு குறித்தும் இலங்கை தூதுக்குழு இதன்போது தௌிவுபடுத்தியது.

இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இலங்கை முன்வைத்திருக்கும் முன்மொழிவுகளை வரவேற்ற தூதுவர் கிரீயர் இரு நாடுகளுக்கும் இடையில் பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான வர்த்தக தொடர்பை உறுதிப்படுத்த விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

Social Share

Leave a Reply