மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் மருத்துவர் மகேஷி சுரசிங்க விஜேரத்னவின் மகள், விசாரணை அதிகாரிகளைக் கொலை செய்வதாக மிரட்டியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தனது தாயாருக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஊடாக ஒரு மனுவை சமர்ப்பிக்க நேற்று(04.07) நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் வருகை வந்திருந்தார். அதன்போதே இந்த கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக கெசல்வத்த காவல்துறையில் புகார் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைகுழு அதிகாரிகளுக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
நரம்பியல் சத்திர சிகிச்சைக்கான மருந்தை அவரின் சொந்த நிறுவனத்தில் கொள்வனவு செய்வதற்கு நோயாளர்களாய் நெறிபபிடுத்தியமை, மூளைச் சாவு அடைந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அதற்கான உபகரணங்களை விற்றமை போன்ற குற்றங்கள் சந்தேக நபரான மருத்துவர் மகேஷி சுரசிங்க விஜேரத்ன மீது சுமத்தப்பட்டுள்ளன.
இதவேளை முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சிகிச்சையின் போது மருத்துவர் மகேஷி சுரசிங்க விஜேரத்ன வழங்கிய பரிந்துரைகள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.